
எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்களுக்கு விடுதலை
எரித்திரியாவில் ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மாலுமிகளை விடுவிப்பதற்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அசர்பைஜான் கெப்டனுக்குச் சொந்தமான சீகல் மரைடைம் நிறுவனத்தால் இயக்கப்படும் ஐரோப்பிய கப்பலொன்று எரித்திரியா கடல் எல்லைக்குள் நுழைந்தபோது 6 மாலுமிகளும் நவம்பர் 7, 2024 அன்று எரித்திரியா அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு பல உயர் மட்ட தலையீடுகள் செய்யப்பட வேண்டியிருந்தது, இதற்காக கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகம் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொண்டது.
அமைச்சர் விஜித ஹேரத் நேரடியாகத் தலையிட்டு, இலங்கை பாதுகாப்புப் படைகளிலும் பணியாற்றிய இந்த இலங்கையர்களை விடுவிப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
அமைச்சரின் இராஜதந்திர தலையீடுகளைத் தொடர்ந்து, ஆறு இலங்கை மாலுமிகளும் இன்று வெள்ளிக்கிழமை மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வெளியுறவு அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மற்றும் ஆபிரிக்க விவகாரப் பிரிவின் அதிகாரிகளால் ஆறு மாலுமிகளும் வரவேற்கப்பட்டனர், மேலும் அவர்கள் ஆறு பேரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
