உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஆணைக்குழுவின் அறிக்கை சிஐடி யினரிடம் கையளிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியின் பணிப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதியின் பணிப்பில் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ,பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாகவும் புதிய திசையிலும் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவில், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
இந்தக் குற்றத்தை கால ஓட்டத்தில் மறைந்து விடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று உத்தரவாதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.