
இலங்கைக்கு மேலும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி வழங்கும் அவுஸ்திரேலியா!
டித்வா புயல் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மேலும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரண உதவியை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலரை அவசர நிவாரண உதவியாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்த நிலையில் அதனை இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்திருந்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் அவசர நிவாரண உதவியானது 3.5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இலங்கை, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுடனும் அவுஸ்திரேலியா தொடர்பில் உள்ளதாகவும், அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கோரிக்கைகளுக்கு அமைய அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஊடாக உதவிகள் வழங்கப்படும் எனவும் அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இந்த ஆதரவானது அவசர நிவாரணப் பொருட்கள், தங்குமிடம், உணவு, நீர் வசதிகளை வழங்குகிறது.
மேலும் இது இடம்பெயர்ந்த மக்களின் சுகாதாரம் மற்றும் கல்விக்கான ஆதரவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், பெண்கள், சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
