
இலங்கை வந்தார் சீன வெளியுறவு அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆபிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு அமைச்சர்கள் ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஆபிரிக்க நாடுகளுக்கே மேற்கொண்டு வரும் மரபைத் தொடர்ந்து, எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கான விஜயங்களை நிறைவு செய்த பின்னரே அவர் கொழும்புக்கு தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வோங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக சீனாவால் விசேட நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்டகால நெருக்கடியாக தொடர்கின்றன.
புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் சீனா காட்டி வரும் பின்னடிப்புகளுக்குக் காரணமாக இந்த ஆய்வுக் கப்பல் விவகாரம் பார்க்கப்படுகிறது.
வோங் யீயின் விஜயத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பில் எத்தகைய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்பது அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமையகத்திற்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்தப் பின்னணியில், சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே வோங் யீயின் விஜயத்தின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது.
அந்தவகையில், சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ, இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் சீன வெளியுறவு அமைச்சின் 17 சிரேஷ்ட அதிகாரிகள் ஒரே விமானத்தில் குழுவாக வந்தனர்.
அவர்கள் இன்று அதிகாலை 01.05 மணிக்கு சீன நிறுவனமான பெய்ஜிங் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானத்தில் தென்னாபிரிக்காவின் டேர்பனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், தூதரகத்தின் உயர் அதிகாரிகள் குழுவுடன் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சின் கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவின் பணிப்பாளர் ஜெனரல் சாவித்ரி பனபோக்கே ஆகியோர் விமான நிலையத்தில் அவர்களை வரவேற்றனர்.
சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று திங்கட்கிழமை மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
