இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமை சாரணர் ஆணையாளர் நியமனம்

 

இலங்கை சாரணர் சங்கத்தின் புதிய தலைமை சாரணர் ஆணையாளராக சட்டத்தரணி மனோஜ் நாணாயக்கார நியமனிக்கப்பட்டுள்ளார்.

1957 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க சாரணர் சட்ட விதிகளின்படி, இந்த நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவரிடம் கையளித்தார்.

கனிஷ்ட சாரணராக பன்னிப்பிட்டிய கிறிஸ்துராஜ கல்லூரியின், முதல் ஹோமாகம சாரணர் குழுவில் 1989 ஆம் ஆண்டு இணைந்த இவர், பின்னர் பதில் மாவட்ட ஆணையாளராகவும்,
சாரணர் மாவட்ட பயிற்சி சபையின் தலைவராகவும், தலைமை சாரணர் ஆணையாளரின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

தேசிய அளவிலான சாரணர் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தலைமை வகித்துள்ள அவர் ,தேசிய மனிதநேய மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் மற்றும் தேசிய கபோரியவின் தேசிய ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் உட்பட பல பதவிகளை வகித்து, இந்நாட்டின் சாரணர் இயக்கத்திற்கு பல சேவைகளை செய்துள்ளார்.