இலங்கை அகதிகளை இந்தியாவில் இருந்து அழைத்து வரும் பணி மீண்டும் ஆரம்பம்
இந்தியாவில் இலங்கை அகதிகள் தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்பும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்புடன் இணைந்து செயற்பட்டு வருவதாக, இந்தியாவில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரக தலைவர் அரெட்டி சியென்னி, தெரிவித்துள்ளார்.
தன்னார்வ அடிப்படையில் இலங்கைக்கு திரும்பிய நான்கு தமிழர்கள், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து அகதிகள் தாயகம் திரும்பும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு 200 இலங்கை அகதிகள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பியதாகவும், இந்த ஆண்டு சுமார் 50 பேர் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை, நாடு திரும்புதல் அல்லது மீள்குடியேற்றம் மூலம் அகதிகளுக்கு நீடித்த தீர்வுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது 80,000 இற்கு மேற்பட்ட இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர்.
அதில், 2002 முதல், 18,643 அகதிகள் தன்னார்வ நாடு திரும்பும் திட்டத்தின் கீழ் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்.
