
இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து கொண்டார்
இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் என்.வி.ரமணா முன்னிலையில் இன்று முற்பகல் 10.15க்கு இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து திரௌபதி முர்மு புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக கடந்த 18 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டிருந்தனர்.
இந்தநிலையில், திரௌபதி முர்மு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதற்கமைய, இன்று முற்பகல் ஜனாதிபதியாக பதவியேற்ற திரௌபதி முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகின்றார்.