ஒடிசா ஜகன்நாதர் ஆலய ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு!
இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், 70 வயதுடைய ஆணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த வருடாந்த விழாவின் மூன்றாவது நாளில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.