ஆலய விக்கிரகங்கள் வழங்கி வைப்பு

-மஸ்கெலியா நிருபர்-

வட்ட வலை மீனாட்சி தோட்டத்தில் வசிக்கும் உலகன் என்பவர் இத்தோட்டத்தில் ஆன்மீக செயற்பாடுகளில் முன் நின்று செயல்படும் ஒருவராகவும் சமூக சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர்.

இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் நீண்ட நாள் சுகயீனமுற்ற நிலையில் இயற்கை எய்தினார்.

இவரின் ஞாபகார்த்தமாக இவரது குடும்பத்தினர் வள்ளி தெய்வானை சமேத மூன்று சிலைகளை மீனாட்சி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி இந்நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு ஹட்டன் நகரத்தில் அமைந்துள்ள சிலைகள் விற்பனை நிலையத்தில் இருந்து பிரதேச மக்கள் சகிதம் வாகன பேரணியாக எடுத்துவரப்பட்டு ஆலய தர்மகர்த்தாவாகிய கனகரத்னம் அவர்களின் தலைமையில் ஆலயத்தில் கையளிக்கப்பட்டன.

இவ்விக்கரங்களுக்கான கும்பாபிஷேக நிகழ்வு எதிர்வரும் முதலாம் தேதி நடைபெற இருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஏனையவருக்கு முன்மாதிரியாக இருக்கும் இவர்களுடைய குடும்பத்தை பிரதேச மக்கள் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.