
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகிறது!
டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சை திணைக்களம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,086 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக, மாணவர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அதிதீவிர வானிலையால் தேசிய அடையாள அட்டைகளை இழந்த மாணவர்கள், கிராம அதிகாரியின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் பரீட்சைக்குத் தோற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், பரீட்சை நிலையங்களுக்கு தடையின்றிச் செல்வதை உறுதிப்படுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
