
அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை தொடர் பணிப்புறக்கணிப்பு!
அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நாளை புதன்கிழமை காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது, கதிரியக்க பரிசோதனைகள் (X-ray), CT பரிசோதனைகள், MRI பரிசோதனைகள், மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான மமோகிராம் (Mammogram) பரிசோதனைகள் மற்றும் சத்திரசிகிச்சை கூடங்களில் கதிர்வீச்சை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகள் அனைத்தும் நாளை பாதிக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
கடந்த 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்புக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினாலேயே, இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாளிகாவத்தை வைத்தியசாலையில் தகுதியற்ற நபர்களால் நோயாளிகளுக்கு கதிரியக்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தே அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை எடுத்துள்ளது.
