
அமைச்சர் குமார ஜயகொடிக்கு டி.வி. சானக்க பகிரங்க சவால்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க, அண்மைய நிலக்கரி இறக்குமதி டெண்டரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு நேரடி விவாதத்திற்கு வருமாறு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்தே ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய டி.வி. சானக்க, நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு பெரிய அளவிலான மோசடி குறித்த விபரங்களை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
நாட்டிற்குத் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் அமைச்சர் விவாதத்திற்குச் சம்மதித்தால், இந்த கொடுக்கல் வாங்கல் “முற்றிலும் ஊழல் நிறைந்தது” என்பதைத் தான் நிரூபிப்பதாக அவர் சவால் விடுத்தார்.
வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் வருடாந்த நிலக்கரி டெண்டரை, அரசாங்கம் திட்டமிட்டே இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
நுரைச்சோலை (லக்விஜய) மின் உற்பத்தி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்படி, இறக்குமதி செய்யப்பட்ட முதல் இரண்டு நிலக்கரித் தொகுதிகளின் கலோரி பெறுமதி (Calorific Value) 5,600 முதல் 5,800 வரை மட்டுமே இருந்துள்ளது.
இது டெண்டர் வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்சத் தேவையான 5,900-ஐ விடக் குறைவு என அவர் தெரிவித்தார்.
