அமெரிக்காவின் முடிவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தல்!

தங்களது அமைப்பிலிருந்து விலகுவதற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள தீர்மானம் வருத்தமளிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதற்கான நிர்வாக உத்தரவில் அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட்-19 பரவல் உள்ளிட்ட சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாக கையாண்டதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உறுப்பு நாடுகளின் பொருத்தமற்ற அரசியல் செல்வாக்கிலிருந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தவறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்கா உள்ளிட்ட பிற உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச ரீதியாக உள்ள மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக அமெரிக்காவுடனான ஒற்றுமையை பராமரிக்க விரும்புவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அதற்காக ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் எனவும், அமெரிக்க தமது முடிவை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24