அனுமதி பெறாத நுண் நிதி நிறுவனங்கள் உள் நுழையத் தடை : பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!
வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிறுவனங்கள் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் பிரதேச சபையின் அனுமதி பெற்றே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தி உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தினால் முன்மொழிவொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த முன்மொழிவில் வறிய மக்களின் இலக்குவைத்து அதிக வட்டி வீதங்களுடன் பல நுண் நிறுவனங்கள் கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்துள் உள் நுழைந்து ஏழை மக்களை அதன் பொறிக்குள் வீழ்த்தி ஏமாற்றி ஏப்பமிட்டு வருகின்றது.
இந்த விளம்பரங்களால் எமது பிரதேச மக்கள் நிதிக்கான அவசர தேவை கருதி அதிகூடிய வடிகளுக்கு நிதியை பெற்றுக்கொள்கின்றனர்.
அதன்பின்னர் குறித்த கடனை செலுத்துவதில் பெரும் இடர்களை சந்திகின்றனர்.
இதனால் மீளவும் நிதி கட்டத்தவறும் கடனாளிகள் வீடுகளுக்கு நேரகாலம்.பாரது நிதி வசூலிக்கும் நபர்கள் சென்று பெரும் தொல்லை கொடுக்கும் நிலை உருவாகின்றது. அத்துடன் கடன் பெற்றவர்களுக்கு மிக அழுத்தங்களை வசூலிப்போர் கொடுக்கின்ற நிலையும் காணப்படுகின்றது.
குறிப்பாக பெண் தலைமை குடும்பம் இக்கடனை பெற்றிருந்தால் குறித்த பெண்களுடன் தவறான முறையில் நடந்துகொள்ள சில வசூலிப்பாளர்கள் முயற்சிப்பது மட்டுமல்லாது அதற்கான மன அழுத்தங்களையும் கொடுக்கின்றனர்.
இதனால் தற்கொலை முயற்சிக்கு கடனாளர்கள் செல்லும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப் படுகின்றது.
எனவே எமது பிரதேச மக்களது வறுமையை குறித்த நிறுவனங்கள் தமக்கான முதலீட்டு இடங்களாக பயன்படுத்துவதற்கு எமது சபை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
முன்மொழிவின் அவசியம் கருதி அதை வழிமொழிந்து உரையாற்றிய உறுப்பினர் சு.பிரகலாதன், சட்ட விதிகளை பேணாது எமது பகுதிக்குள் 40 இற்கும் அதிகமான நுண்கடன் நிறுவனங்கள் நுழைந்து மக்களுக்கு கடும் குடைச்சலை கொடுக்கின்றன. இந்த நிறுவனங்களில் பல பதிவுகள் அற்றவையாக இருக்கின்றன.
அத்துடன் இந்த நிறுவனங்களின் பாதிப்பு எமது மக்களுக்கு அதிகமாக வருகின்றது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.
இதுகுறித்து உறுப்பினர் நாவலன் கூறுகையில் எமது மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த நிறுவனங்களை சபை ஊடாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் இனிவருங் காலத்தில் மக்கள் நுண் நிதி நிறுவனங்களை நாடாதிருக்க விழிப்புணர்வுகளை மக்களுடம் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதும் அவசியம். சில பிரதேச சபைகள் நுண் நிதி நிறுவனங்கள் தமது ஆழுகைக்குள் செல்வதையே தடைசெய்ய்துள்ளனர் என்றும் அதுபோன்று எமது சபையும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்..
குறித்த விவாதத்தில் மற்றொரு உறுபினர் பார்த்தீபன் குறிப்பிடுகையில் – மக்கள் தமக்கான நிதியின் அவசிய தேவையை நிவர்த்திக்கவே நிந்த நிறுவனங்களை நாடுகின்றனர். அதைத் தடுக்க நாம் எமது பிரதேசங்களிலில் உள்ள பொது அமைப்புக்கள் ஊடாக மக்கள் அவசர கடன் வசதி பெறக்கூடிய பொறிமுறையை உருவாக்கி இந்த பிரச்சினைக்கு மாற்தீடாக தீர்வாக கொடுக்கலாம். அது தொடர்பில் தனது வட்டத்தில் ஒரு கட்டமைப்பை சட்டரீதியாக உருவாக்கி வருவதாகவும் கூறினார்.
இதனிடையே மற்றொரு உறுபினரான இதயதீபன் இந்த நுண்கடன் தொல்லையால் சில நாள்களுக்கு முன்னர் தனது கிராமத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக சுட்டிக்காட்டியதுடன் சமுர்த்தி வங்கிகள் போன்ற அமைபுகள் மக்களுக்கு இலகுவான முறையில் கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார்
குறித்த முன்மொழிவு குறித்து சபையின் தவிசாளர் அசோக்குமார் – சபையின் அனுமதி பெறாது எந்தவொரு நுண் நிதி நிறுவனமும் உள்நுழைய முடியாது. மாறாக நியாயமான வட்டி வீதங்களுடன் பிரதேச சபையின் நியமங்களை ஏற்று சபையின் அனுமதி பெற்றே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
அவ்வாறு சபையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என்று கூறியதுடன் குறித்த முன்மொழிவு ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.