அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபாய் உதவித்தொகை கணக்கிடப்பட்ட எண்ணிக்கையில் 73% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவும் இந்நாட்களில் வழங்கப்படுகிறது.

நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்து 186,893 மாணவர்கள் 15,000 ரூபாய் உதவித்தொகையைப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதில் 136,994 மாணவர்கள் இதுவரை அந்த உதவித்தொகையைப் பெற்றுள்ளனர்.

அதன்படி, எஞ்சியுள்ளவர்களுக்கான குறித்த கொடுப்பனவுகளை விரைவாக வழங்கி முடிக்க அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதோடு, அதற்காக அரச பொறிமுறை பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அநர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 6,370 தொழில்துறை உரிமையாளர்களின் தகவல்கள் இதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் தலா 200,000 ரூபாய் கொடுப்பனவை 5,034 விண்ணப்பதாரர்களுக்கு வழங்குவதற்காக 1,006,800,000 ரூபாய் நிதி ஒதுக்கீட்டை மாவட்ட செயலகங்களுக்கு அமைச்சு வழங்கியுள்ளது.