அஞ்சல் தொழிற்சங்கங்கள் ஊழியர்களை தவறாக வழிநடத்துவதாகக் குற்றச்சாட்டு

அஞ்சல் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மேலதிக நேர வேலை செய்வதை நிறுத்தும் முடிவின் மூலம் அஞ்சல் தொழிற்சங்கங்கள் ஊழியர்களைத் தவறாக வழிநடத்தியுள்ளதாக அஞ்சல் மாஅதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார தெரிவித்துள்ளார்.

அஞ்சல் துறையின் மொத்த செலவில் 90 வீதம் தற்போது சம்பளம் மற்றும் மேலதிக நேர பணிகளுக்கு செலவிடப்படும் சூழலில், காணக்காய்வு அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு மாறாக, அரசாங்க விதிகளிலிருந்து விலகிச் செயல்பட முடியாது.

சுமார் ரூ.4 பில்லியனைத் தாண்டிய வருடாந்திர செலவினத்துடன் செயல்படும் அஞ்சல் துறை, வருமான நிலைமை மேம்படுத்தப்படாவிட்டால், ஆண்டுக்கு 12 பில்லியனுக்கும் அதிகமான இயக்க இழப்பைச் சந்திக்கும்.

பாரம்பரிய விரைவு அஞ்சல் சேவைகளிலிருந்து விலகி, வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டப்பட்ட அஞ்சல் சேவைகளை செயல்படுத்துவதன் மூலம் வருவாய் ஈட்ட அஞ்சல் துறை ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வரும் நேரத்தில், அஞ்சல் தொழிற்சங்கங்கள் ஊழியர்களைத் தவறாக வழிநடத்தி, இதுபோன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.

அஞ்சல் நிலைய வலையமைப்பைச் சேர்ந்த 3,354 துணை அஞ்சல் நிலையங்களின் துணை அஞ்சல் அதிகாரிகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், அந்த அலுவலகங்களின் பணிகள் வழக்கம்போல் மேற்கொள்ளப்படுவதால், அந்த அலுவலகங்களிலிருந்து அஞ்சல் சேவைகளை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அஞ்சல் பொருட்களை வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் மேலும் இந்த அநியாய தொழிற்சங்க நடவடிக்கையால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அஞ்சல் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊழியர் மேலதிக நேர ஊதியம் மற்றும் பிற சலுகைகளைக் குறைப்பதை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூட்டு அஞ்சல் தொழிற்சங்க சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

அஞ்சல் போக்குவரத்து பிரிவு, நாரஹேன்பிட்ட அஞ்சல் தொழில்துறை பிரிவு மற்றும் மத்திய அஞ்சல் பரிமாற்றத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இப்போது மேலதிக நேர கடமைகளில் இருந்து விலகுவதாக அவர் கூறினார்.