ஆபாச விளம்பரத்தால் கவனம் சிதறி பரீட்சையில் தோல்வி : கூகுள் மீது வழக்கு

யூடியூப்பில் படிக்கும் போது விடியோவின் இடையில் வரும் ஆபாச விளம்பரங்களால் தனது கவனம் சிதறியதாகவும், அதனால் சரிவர படிக்க முடியாமல் பரீட்சையில் தோல்வி அடைந்தேன் என்று கூகுள் நிறுவனத்தின் மீது மனித உரிமை மீறல் வழக்கு தொடுத்துள்ளார் ஒருவர்

இச்சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேசம் பன்னா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் கிஷோர் சவுத்ரி. இவர் மாநில காவல்துறை பரீட்சைக்கு தயாராகி வந்துள்ளார்,  இந்நிலையிலேயே இவ்வாறு வழக்கு தொடுத்துள்ளார்.

சமூக ஊடக தளங்களில் நிர்வாணத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய நீதிபதி குழு முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்துள்ளது

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் விளம்பரம் பிடிக்கவில்லை என்றால், அதைப் பார்க்க வேண்டாம், அவர் ஏன் அந்த விளம்பரத்தைப் பார்த்தார் என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம், விளம்பரங்களை பார்க்காமல் விட்டிருக்கலாமே,  பரீட்சைக்கு சரியாக படித்திருக்கலாம், பரீட்சையை நன்றாக எழுதியிருக்கலாம் என்று கூறி .வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அதுமட்டுமன்றி, வழக்கு தொடுத்தவர் கூகுள் மீது குற்றம் சாட்டியதோடு, தனது தேர்வில் தோல்வி அடைந்ததற்கு நஷ்ட ஈடாக 75 லட்சம் கேட்டிருந்தார்.

இதை கேட்ட நீதிபதிகள் இது போன்ற வழக்குகள் நீதிமன்றத்தின் நேரத்தை தான் வீணடித்தது என்று கூறி வழக்கு தொடுத்தவருக்கு 1 லட்சம் அபராதம் விதித்தனர்.

அதன் பின் நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்ட ஆனந்த், தான் இன்னும் வேலைக்கு போகாததால் அவ்வளவு பெரிய அபராதத் தொகையை செலுத்த இயலாது என்றும், அபராதத் தொகையைக் குறைத்துத் தருமாறும் கேட்டார்.

பின்னர் மனுதாரரின் கோரிக்கைப்படி அவரது அபாரத்தத் தொகையைக் குறைத்து ரூ.25,000 ஆக விதித்தனர்.

மேலும், விளம்பரத்திற்காக இவ்வாறு வழக்குகளை தொடர்ந்து கொண்டு வந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது தவறான செயல். அதை எப்போதும் யார் செய்தாலும் மன்னிக்க முடியாது என்று நீதிபதிகள் கண்டித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.