800 கோடியை எட்டப்போகும் உலக மக்கள் தொகை

உலக மக்கள் தொகை 800 கோடி என்ற மைல் கல்லை இன்று எட்டவுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1. விழுக்காடு மக்கள் தொகை பெருக்கும் பதிவாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்கு காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு விழுக்காட்டிற்கு குறைவாக பதிவானது.

இந்நிலையில், இன்றைய தினம் (நவம்பர் 15) உலக மக்கள் தொகை 800 கோடி என்ற எண்ணிக்கையை எட்டவுள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. மேலும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்டு நாடு என்னும் சிறப்பை பெற்றுள்ள சீனாவை இந்தியா 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றும் ஐநா கணித்துள்ளது. 2050ல் இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் உலக மக்கள் தொகை 2 மடங்கு அதிகரித்து 4 பில்லியனில் இருந்து 8 பில்லியனாக உயரவுள்ளது. மேலும் 2050க்குள் உலக மக்கள் தொகை 9.7 பில்லியனாக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1950ம் ஆண்டு உலக மக்கள் தொகை என்பது 2.5 பில்லியனாக இருந்தது. 72 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 5.5 பில்லியன் அதிகரித்து 8 பில்லியனை இன்று தொடவுள்ளது.