வடக்கு கிழக்கில் கனமழைக்கான எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக நாளை சனிக்கிழமை முதல் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனிடையே,  தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேலும் வளர்ச்சியடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை மன்னார் மற்றும் சிலாபம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

எனவே, குறித்த பிரதேசங்களில்  கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.