
இலங்கையில் மூவர் உயிரிழப்பு : சென்னையில் கரையை கடந்தது மாண்டஸ் புயல்
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும்.
அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் 2.5 மீற்றர் முதல் 3.5 மீற்றர் வரை அலைகள் எழக்கூடும்.
கரையோர கடற்பரப்புகளில் அலைகள் 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், இலங்கையில் இந்த புயல் தாக்கம் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 5-ந் திகதி வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது.
இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உட்பட சில இடங்களில் கடும் மழை பெய்தது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7 செ.மீ. என்ற அளவில் கனமழை பதிவாகியிருந்தது.
நேற்று காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்தது.
அத்துடன் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்க ஆரம்பித்தது.
புயலின் பின்பகுதி இன்னும் சில மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
