
நாட்டில் மோசமான வானிலை தொடரும்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
வடக்கு அந்தமான் கடலை சுற்றி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்காள விரிகுடாவை ஒட்டி நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அறிவித்தது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் ஹொரணவில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது, இது 104 மில்லிமீற்றர் ஆகும்.
தொடர் மழையுடன், காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு 12 முதல் 20 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 85 மற்றும் 100 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பகுதியில் இம்மாதம் 25ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரை அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
