அரபிக்கடலில் காற்றழுத்த தாழமுக்கம் : இலங்கைக்கு எச்சரிக்கை

மூத்த வானிலை ஆய்வாளர் அக்யூவெதர் ஜேசன் நிக்கோல்ஸின் கணிப்புப்படி, அடுத்த வார தொடக்கத்தில் இலங்கையில்  கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை வலுவிழக்கத் தொடங்கும் முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என ஜேசன் நிக்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் சுமத்ராவுக்கு வடக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வெள்ளிக்கிழமைக்குள் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும், அடுத்த வார தொடக்கத்தில் இலங்கையிலும் கனமழையைக் கொண்டுவரும் என்று நிக்கோல்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக சனிக்கிழமை முதல் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் காற்றழுத்த தாழமுக்கம் : இலங்கைக்கு எச்சரிக்கை