
“வெறும் நான்கு மணிநேரத்தில் ஈரானை அழிப்போம்” – ட்ரம்ப் அதிரடி காலக்கெடு!
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது தொடர்பாக அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவுக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானின் பாலங்கள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களை நான்கு மணிநேரத்திற்குள் அழிப்பதற்கான திட்டம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி (ET) வரை (இலங்கை நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5:30 மணி) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடு முடிந்து நான்கு மணிநேரத்திற்குள், அதாவது புதன்கிழமை நள்ளிரவுக்குள் தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
“தமது இராணுவ வலிமையால் ஈரானின் ஒவ்வொரு பாலத்தையும் தகர்க்கவும், ஒவ்வொரு மின்சார உற்பத்தி நிலையத்தையும் வெடிக்கச் செய்து மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு முழுமையாக அழிக்கவும் தங்களிடம் திட்டம் உள்ளது,” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த ஒட்டுமொத்த அழிவு நடவடிக்கையும் வெறும் நான்கு மணிநேர காலப்பகுதியில் அரங்கேறும் என அவர் சுட்டிக்காட்டினார்.
“இப்படி நடப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அதற்கான வலிமை எங்களிடம் உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரான் மீதான போர் 38-வது நாளை எட்டியுள்ள நிலையில், பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
