எரிபொருளுக்கான QR குறியீட்டை பதிவு செய்யும் போலி இணையதளங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ QR குறியீட்டு (Fuel Pass) தளம் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள போலி இணையதளம் குறித்துப் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு முன்னணி சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்துத் தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த மோசடி இணையதளமானது பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசாங்கத்தால் நடத்தப்படும் உத்தியோகபூர்வ தளம் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசிய பொதுச் சேவைகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இவ்வாறான இணையவழி மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தனிப்பட்ட தகவல்கள்: உத்தியோகபூர்வமற்ற தளங்களில் உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் அல்லது வங்கி விபரங்களைப் பகிர வேண்டாம்.

எரிபொருள் குறியீட்டைப் பெற்றுக்கொள்ள https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்தை மாத்திரம் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் எரிபொருள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தரவுகளைத் திருட முனையும் கும்பல்கள் குறித்துப் பாதுகாப்புத் தரப்பினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.