உலகளாவிய தொழில்நுட்ப சேவை நிறுவனமான Virtusa Corporation, அதன் இயக்குநர் சபையின் புதிய தலைவராக ஸ்ரீனிவாஸ் பி.ஜி. (Srinivas BG) நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, நிதிச் சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான உலகளாவிய நிர்வாக அனுபவத்தை ஸ்ரீனிவாஸ் பி.ஜி. கொண்டுள்ளார். PCCW, Infosys மற்றும் ABB உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் முக்கிய தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளதுடன், பெரிய அளவிலான டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளிலும் பணியாற்றியுள்ளார்.
அவர் 2022ஆம் ஆண்டு முதல் Virtusa இயக்குநர் சபையின் தலைவராகப் பணியாற்றிய ராஜ் மேத்தாவை தொடர்ந்து அந்தப் பொறுப்பை ஏற்கிறார். ராஜ் மேத்தா ஒக்டோபர் 1ஆம் திகதி இயக்குநர் சபையிலிருந்து விலகினாலும், நிறுவனத்தில் முதலீட்டாளராக தொடர்ந்து இருப்பார் என Virtusa தெரிவித்துள்ளது.
Virtusa தலைவர் பதவியை ஏற்கவுள்ள ஸ்ரீனிவாஸ் பி.ஜி., செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் மூலோபாய முன்னேற்றத்துக்கு பங்களிப்பது பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.










