
எரிபொருள் நெருக்கடியால் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்கும் வியட்நாம்!
ஈரான் போர் நிலைமையால், எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளின் விலை பாரிய அதிகரிப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில் எரிபொருளை சேமிக்கும் முயற்சிகளின் ஒரு அங்கமாக நாட்டிலுள்ள நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்குமாறு வியட்நாமின் வர்த்தக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் ஒன்றாகும். வியட்நாம் எரிபொருள் தேவைக்கு மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதியை சார்ந்திருப்பதாக வியட்நாம் அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
போக்குவரத்திற்கான தேவையைக் குறைக்க நிறுவனங்கள் தமது ஊழியர்களை ‘முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த மாத இறுதியில் இருந்து பெட்ரோல் விலை 32% டீசல் விலை 56% மற்றும் மண்ணெண்ணெய் விலை 80% உயர்ந்துள்ளன.
வியட்நாமின் தலைநகரான ஹனோயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று செவ்வாய்க்கிழமை வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கன்றது.
அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் எரிபொருளை பதுக்கி வைக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பெறுவதற்காக வியட்நாமின் பிரதமர் பாம் மின் மின் நேற்று திங்கட்கிழமை குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தனது சகாக்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஏப்ரல் இறுதி வரை அமுலில் இருக்கும் எரிபொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை நீக்க வியட்நாம் அரசு நேற்று முடிவு செய்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

