வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் சிக்கல் இருக்காது

வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் சிக்கல் இருக்காது என தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை உறுதி.

முக்கிய பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது.

இதையடுத்து சீமான், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வாரிசு சிக்கல் குறித்து தங்களுடைய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க திட்டமிட்டிருந்தனர். அதேசமயம் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி, சென்னையில் இயங்கி வரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் நிர்வாகிகளிடம் இது தொடர்பாக பேசியுள்ளார்.

அப்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள், தெலுங்கு தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அவர்கள் தங்களுடைய மாநிலத்தில் வாரிசு திரைப்படத்திற்கு எந்த சிக்கலும் இருக்காது என உறுதி அளித்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.