-அம்பாறை நிருபர்-
அம்பாறை பொல்வத்த பகுதியிலிருந்து அம்பாறை நகரத்திற்கு, விற்பனை செய்வதற்காக கஞ்சா கொண்டு வந்த இருவர், நேற்று வெள்ளிக்கிழமை மாலை, அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், இதில் ஒரு சந்தேக நபர் அம்பாறை கோவில் அருகே கைது செய்யப்பட்டார்.
மற்றொரு சந்தேக நபர், அம்பாறை புற நகர் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த போது கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர், 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததுடன், மற்றைய சந்தேக நபர், 250 கிராம் கஞ்சா வைத்திருந்தமை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
அண்மைக்காலமாக இந்த சந்தேக நபர்கள், பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி, அம்பாறை நகரத்திற்கு கஞ்சாவை கொண்டு சென்று வருவதுடன், மேலும் அவை அம்பாறை நகரத்தில் விற்பனை செய்வதற்காக வேறு நபர்களுக்கு வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர், பொல்வத்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், 2 ஆவது சந்தேக நபர் வாவின்ன பகுதியைச் சேர்ந்தவராவார்.
இந்த சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று சனிக்கிழமை, அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரில், அம்பாறை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் மேற்பார்வையின் கீழ், அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமாராச்சி மற்றும் அம்பாறை தலைமையக தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் இந்திரஜித் குணவர்தன ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சாந்த குமார தலைமையிலான அதிகாரிகள் இச்சோதனை நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர்.

