
இருவேறு விபத்துக்களில் 6 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!
மரதன்கடவெல மற்றும் ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில், நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வேறு வேறு விபத்துக்களில், ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மரதன்கடவெல பகுதியில், சுமார் ஏழு அடி ஆழமுள்ள நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்ததில், அதே பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.
புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீடு ஒன்றின் அருகில், குறித்த சிறுவன் தனது 2 சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து விளையாடிக்கொண்டிருக்கையில், கிளிளை பிடிப்பதற்காக சிறுவன் ஓடிய போது குறித்த நீர் நிறைந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மரதன்கடவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவை, நாரிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ்விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் வெவ்ருகன்னல, சவ்ரித் மாவத்தையைச் சேர்ந்த பாத்திமா அலீதா (வயது 6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமான செலுத்துகையே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
