நீரில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணனும் தங்கையும் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்-

ஹாலி-எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹாலிஎல போகொட பகுதியில் நீர் வடிந்தோடும் வடிகானில் 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நேற்று வியாழக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களில் 8 வயது சிறுமியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் படையினர் பொலிஸார் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில்  சற்றுமுன் 10 வயது சிறுவனின் சடலம் குறித்த பகுதியில் இருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நேற்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையின் காரணமாக போகொட கொட்டியாமலுவ பிரதேசத்தில் உள்ள குறித்த சிறுவர்களின் வீட்டிற்கு முன்னால் இருந்த வடிகான் நிரப்பியுள்ளது.

இந்நிலையில் வீட்டில் இருந்து வடிகானுக்கு அப்பால் உள்ள வீட்டுக்கு அவர்களது தாய் சென்றிருந்த வேளை தாயை அழைத்து வருவதற்காக சென்ற இரண்டு சிறுவர்களும் நீர் வடிகானை கடப்பதற்கு முற்பட்ட வேளை வடிகானில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த இரண்டு சிறுவர்களும் போகொட வித்தியாலயத்தில் தரம் ஐந்து மற்றும் தரம் இரண்டில் கல்வி கற்கும் சகோதரர்கள் ஆவர்.

சிறுவர்களின் தந்தை கொழும்பில் தொழில் புரிந்து வருவதுடன், குறித்த சிறுவர்கள் இருவரும் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறுவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.