எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் கைபேசிகள் திருட்டு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய பயன்படுத்திய ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்த இருவரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 24 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் ஹோமாகம மற்றும் பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தரமுல்லையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கையடக்கத் தொலைபேசியை திருடியதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹரகம, பிலியந்தலை, கொட்டாவ மற்றும் ராஜகிரிய உள்ளிட்ட 08 பிரதேசங்களில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து 12 கையடக்கத் தொலைபேசிகளை சந்தேகநபர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும், வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சிசிடிவி காட்சிகளில் சந்தேகநபர்கள் கொள்ளையடிப்பது பதிவாகியுள்ளது.