வைத்தியசாலை கவனயீனத்தால் பறிபோன உயிர்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒன்பதாம் திகதி கேஸ்டிக் மற்றும் தாங்க முடியாத குளிர் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை -தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஐந்து மாத கைக்குழந்தையின் தாயாரான குணசிங்க முடியன்சலாகே ஹன்சிகா பியூமாலி சமரசேன (23 வயது) எனவும் தெரிய வருகின்றது.

குறித்த இளம் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 15ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு கடமையில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் தாதியரிடம் குறித்த பெண் மயக்கமுற்ற நிலையில் இருப்பதாக கூறிய போதிலும் , அந்நோயாளி குறித்து கடமை நேர வைத்தியர்களுக்கு தெரியப்படுத்தவில்லை என  சிற்றூழியர் ஒருவர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின்னர் சதையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் எனவும் சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் கடந்த சில மாதங்களாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் மரணங்களின் வீதம் அதிகரித்து வருவதாகவும், அதிகளவிலான முறைப்பாடுகள் நோயாளர்களை கவனிக்காமையே காரணம் எனவும் வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.