சிறுபான்மை மக்களின் காணிக்குள் அத்துமீறி புத்தர் சிலை வைக்க முயற்சி

-திருகோணமலை நிருபர்-

புத்தர் சிலை வைக்க துப்பாக்கி முனையில் பொதுமக்களை அச்சுறுத்திய பௌத்த பிக்குவின் பாதுகாப்பு படை வீரரொருவரை கைது செய்யுமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்மலைகுடா பகுதியில் பௌத்த மத குருமார்களால் சிறுபான்மை மக்களின் காணிக்குள் அத்துமீறி புத்தர் சிலை வைக்க முற்பட்டபோது அங்கு அமளி துமளி நிலவியுள்ளது.

இந்நிலையில் குறித்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலுடன் சென்றிருந்த வேளையில் மெய்ப்பாதுகாவலர் பொதுமக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதை சமூக வலைத்தளங்களின் ஊடாக பகிரப்பட்டு வருகின்றது.

இதே நேரம் குறித்த பாதுகாவலர் கடமை நேரத்தில் துப்பாக்கியை பயன்படுத்திய விதம் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் எனவும் சிவில் சமூக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பவர்கள் நிதானமாக செயல்பட வேண்டுமே தவிர தமது துப்பாக்கியை வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோவை ஆதாரமாக வைத்து புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.