Last updated on April 11th, 2023 at 07:28 pm

திருகோணமலை மாவட்ட சிறந்த பெண்முயற்சியாளருக்கான விருது வழங்கும் நிகழ்வு

திருகோணமலை மாவட்ட சிறந்த பெண்முயற்சியாளருக்கான விருது வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான திருகோணமலை மாவட்ட விருது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையை சேர்ந்த பெண் முயற்சியாளர் எம்.பிஸ்ரியாவுக்கு கிடைக்கப் பெற்றது.

குறித்த விருது வழங்கும் வைபவம்  நேற்று புதன்கிழமை   பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம் பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த பெண் முயற்சியாளரான பிஸ்ரியா டீயப உற்பத்தியில் ஈடுபட்டமையை பாராட்டி விருதுகளும் 50 ஆயிரம் ரூபா பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமினியின் மேற்பார்வையில் பெண் முயற்சியாளர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வினை மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.

‘அவள் தேசத்தின் பெருமை’ எனும் தொனிப்பொருளின் கீழ் இவ் வருட சர்வதேச மகளிர் தினமான நேற்று புதன்கிழமை இடம் பெற்ற தேசிய நிகழ்வின் போது விருதுகளும் வழங்கப்பட்டன.

பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்தன, மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.