மதுபோதையில் பேருந்திலிருந்து விழுந்து ஒருவர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்-

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்தில் தவறி விழுந்தமை தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இருந்து நேற்று வியாழக்கிழமை திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில்  வருகை தந்த நபர் இறங்குகுவதற்காக பேருந்தின் கதவோரத்தில் நின்ற வேளை தவறி விழுந்து காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் கோமரங்கடவல-பக்மீகம பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அசித நாமல் வீரகந்த (36வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் அதி உச்ச மதுபோதையில் இருந்ததாகவும், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பில் அரச பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.