திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்
அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கவும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியசாலை வைத்தியர்கள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்கிழமை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்கள் ஊழியத்தில் கை வைக்காதே “வான் உயரத்தில் பணவீக்கம் நடுவீதியில் உத்தியோகத்தர்கள்” “வழங்கு வழங்கு நோயாளர்களுக்கு மருந்தை வழங்கு” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் செந்தூரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மருந்து தட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அதிகளவில் கஷ்டமான நோயாளர்கள் அரச வைத்தியசாலைகளை நம்பி சிகிச்சைகளுக்காக வருவதாகவும் அரசாங்கத்தினால் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து வகைகளை வழங்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் அதிக அளவிலான மரணங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.