சுதந்திர ஊடகவியலாளர் நிபோஜனின் உடல் நல்லடக்கம்
-யாழ் நிருபர்-
புகையிரத விபத்தில் உயிரிழந்த சுதந்திர ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இன்று புதன்கிழமை உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கிளிநொச்சியைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரான நிபோஜன் (வயது-30) கண்டி நோக்கிச் சென்ற மாத்தறை விரைவு ரயிலில் பயணித்த போது தெகிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் தவறி விழுந்து கடந்த 30 ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று புதன்கிழமை அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நண்பர்கள் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு தமது அஞ்சலியினை செலுத்தியதுடன் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோரின் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.