கம்பளை ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை : வேன் சாரதியிடம் தொடர்ந்தும் விசாரணை
கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மீட்கப்பட்ட வேனின் சாரதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவர் மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வேன், பேராதனை பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டது.
அதன் சாரதி பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம். இயந்திரம், ஆயுதங்களுடன் வேனில் சென்ற நால்வர் அடங்கிய குழுவொன்றினால் நேற்று அதிகாலை கொள்ளையிடப்பட்டது.
வங்கியின் பாதுகாவலரை துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் இதற்காக பயன்படுத்தப்பட்ட வேன் பேராதனை பகுதியில் மீட்கப்பட்டதுடன் அதன் சாரதி வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த வேன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 76 லட்சத்து 46 ஆயிரத்து 700 ரூபா பணம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் பயணித்த வேன் அதன் சாரதியுடன், வாடகைக்காக பெறப்பட்டிருந்தாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.