மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கும் ரஞ்சன் : விண்ணப்பிப்பது எவ்வாறு?

இலங்கை நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் ஒரு நேரடி வீடியோவில்இ கடந்த மூன்று மாதங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்காவில் தங்கியிருந்த போது கிட்டத்தட்ட 500 மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாக ராமநாயக்க கூறினார்.

இந்த மடிக்கணினிகள் அமெரிக்காவில் வசிக்கும் வர்த்தகர்கள் மற்றும் சாதாரண பிரஜைகள் உட்பட இலங்கையர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மடிக்கணினி விநியோகம் தொடர்பில் பொய்யான விளம்பரங்களை பரப்பி பொதுமக்களை ஏமாற்றுவதற்கு பலர் முயற்சிப்பதாக தமக்கு தெரியவந்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டினார்.

மடிக்கணினிகள் விற்பனைக்கு இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் போலியான விளம்பரங்களை மறுத்த முன்னாள் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்காலத்தில் ஜப்பான், இத்தாலி, நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், மேலும் மடிக்கணினிகளை விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ராமநாயக்க தெரிவித்தார்.

மடிக்கணினிகள் தேவைப்படும் சிறுவர்கள் பாடசாலை அதிபரின் பரிந்துரையுடன் எழுத்து மூலம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்து தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக தம்மை தொடர்பு கொண்டு மடிக்கணினிகளை பெற்றுக்கொள்ளுமாறும் ரஞ்சன் ராமநாயக்க  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மடிக்கணினிகளுக்கான உத்தியோகபூர்வ கோரிக்கை கடிதங்களை தனது 0773624927 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் ராமநாயக்க மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தற்போது அரசியல் ரீதியில் செயற்பட முடியாது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க