இரு இளைஞர்களை கொன்று கோழிக்கூட்டின் கீழ் புதைத்த சம்பவம் : அறுவர் கைது

மாவனல்லையில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் இரு இளைஞர்களை கொலை செய்து புதைத்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சந்தேக நபர்களை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

புத்தளத்தில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நால்வரில் பிரதான சந்தேக நபர்கள் இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிரதான சந்தேக நபர்களான மொஹமட் நிசார் மொஹமட் ஃபர்ஹான் என்ற ‘ஹுரிமலுவே ஃபர்ஹான், அப்துல் லத்தீப் மொஹமட் மற்றும் மேலும் இரு சந்தேக நபர்கள் இரட்டைக் கொலைக்கு உதவிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்தவில்லை என ஹுரிமலுவே பர்ஹான்’ விசாரணைகளின் போது வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் இறந்தவுடன் புதைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சந்தேக நபர்கள் இளைஞர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு பொலிஸாரை அழைத்துச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் 29, 34 மற்றும் 35 வயதுடைய மாவனெல்லை மற்றும் புத்தளத்தை சேர்ந்தவர்கள்.

அவர்கள் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்லை கிரிங்கதெனிய மற்றும் கெரமினிய பிரதேசங்களைச் சேர்ந்த 28 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்கள் 2022 நவம்பர் 18 மற்றும் 25 ஆம் திகதிகளில் காணாமல் போயுள்ளனர்.

2022 டிசம்பரில் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், ரம்புக்கனையில் உள்ள வீடொன்றில் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, கோழிக்கூடு ஒன்றின் கீழ் புதைக்கப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

போதைப்பொருள் விற்பனைக்காக இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.