கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசாரிப்பதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை காலை இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை இராணுவ படைப்பிரிவின் அதிகாரி சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் மீது கனடா தடைகளை விதித்துள்ளது.
1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த குழு கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.