
இரண்டு பிள்ளைகளின் தந்தையை மண் வெட்டியால் வெட்டிய மாணவனுக்கு விளக்கமறியல்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- மஹதிவுல்வெவ பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையை மண்வெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை குறித்த மாணவனை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரகமுவ றாலலாகே ரிவிது சதுஸ்க (16வயது) எனவும் தெரிய வருகின்றது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
விடுமுறை தினங்களில் குறித்த மாணவன் மஹதிவுல்வெவ குளத்திற்கு மீன்பிடிப்பதற்காக செல்வதாகவும், மீன்பிடி சங்கத்தில் அங்கத்துவம் இல்லாதவர்கள் மீன்பிடிக்க தடை என தாக்குதலுக்கு உள்ளானவர் கூறியதையடுத்து இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மாணவன் வீதியோரத்தில் நின்ற போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அருகில் உள்ள வீட்டில் மண்வெட்டி வீட்டோரத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மண் வெட்டியை எடுத்துக் கொண்டு சென்று குறித்த நபரை வெட்டியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதே வேளை, தலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதவான் முன்னிலையில் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து குறித்த மாணவனை எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியயில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.