Last updated on January 4th, 2023 at 06:53 am

காணாமல் போன இரு மீனவர்கள் மீட்பு

காணாமல் போன இரு மீனவர்கள் மீட்பு

 

-மன்னார் நிருபர்-

 

மன்னார்- முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை காயாக்குளியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை  மதியம் மீட்கப்பட்டுள்ளனர்

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார்- முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை காயாக்குளியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (23-12-2022) காலை 10.மணியளவில் காயாக்குளி கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

19 மற்றும் 23 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இவ்வாறு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

குறித்த இருவரையும் சக மீனவர்கள் தொடர்ச்சியாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் புத்தளம் கற்பிட்டி கடல் பகுதியில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட படகை அவதானித்த கற்பிட்டி மீனவர்கள் குறித்த இருவரையும் மீட்டனர்.

இதன் போது குறித்த படகில் இருந்த இருவரும் சிலாவத்துறை காயாக்குளிப் பகுதியில் காணாமல் போன இளைஞர்கள் என்பதை உறுதிப்படுத்திய கட்பிட்டி மீனவர்கள்,   செவ்வாய்க்கிழமை மதியம் 12.30.மணியளவில் பழுதடைந்த படகு மற்றும் இரண்டு மீனவ இளைஞர்களையும் காயாக்குளி மீனவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சென்று காயாக்குளி மீனவர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.