பாலிற்குள் விழுந்த பல்லி : ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்-

பல்லி விழுந்த பாலை குடித்து மயக்கமுற்ற நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியிலேயே இன்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 01, 04, 05, 09 வயது மற்றும் 63 வயது உடையவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

தான் பாலை காய்ச்சி சிறுவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் அறுந்திய போது மயக்க நிலை ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து பால் காய்ச்சிய பாத்திரத்தை பார்த்தபோது அதில் பல்லி விழுந்து கிடந்ததாகவும் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறித்த ஐவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.