இலவச பசளையை பணத்திற்கு விற்ற கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை -மொரவெவ கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவரை கடமையிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பசளையினை விநியோகிக்காமல் பணத்திற்காக விற்றமை தொடர்பில் குறித்த இருவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்

கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோமரங்கடவல கமநல அபிவிருத்தி திணைக்கள களஞ்சியசாலையிலிருந்து, 51 பசளை உரைகளை கெப் வாகனத்தில் கொண்டு செல்லும்போது மொரவெவ பொலிஸார் கெப் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த விசாரணையின் போது மொரவெவ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கோமரங்கடவல கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் கடமையாற்றி வந்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தரொருவரையும் கடமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை தொடர்ந்தும் பசளை விநியோகம் தொடர்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.