காதலர்தின கொண்டாட்டம் : பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்
காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விருந்தின் போது இருதரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் மோதல் ஏற்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் நேற்று புதன்கிழமை அதிகாலை குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, பொலிஸார் அங்கு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைச் சமாளித்து விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், மாணவர்கள் மீண்டும் விடுதியில் இருந்து வெளியே வந்து கலைப்பீடத்திற்கு முன்பாக இரும்பு கம்பிகள் மற்றும் பொல்லுகளுடன் சண்டையிட்டதில் ஒரு மாணவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், பல மாணவர்கள் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவர்கள் குழுவிற்கும் முகாமைத்துவ பிரிவு மாணவர்கள் குழுவிற்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் காரணமாக கலை பீடத்தின் வாயில் மற்றும் கட்டிடத்தின் பல கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.