இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர மாவட்டமான சின்கிலுக்கு தென்கிழக்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவிலும்,  37 கிலோமீட்டர் (23 மைல்) ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு நிறுவனம் அல்லது காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.