களுத்துறை பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

களுத்துறை பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தடை உத்தரவு நவ லங்கா சுதந்திரக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு தொடர்பில் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை விதிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களான காமினி அமரசேகர, ப்ரீத்தி பத்மன் சூரசேன, மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு இன்று வியழக்கிழமை பரிசீலிக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

களுத்துறை பிரதேச சபைக்கான நவ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் திலக் வராகொட மற்றும் அதன் களுத்துறைக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர் செனால் வெல்கம ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

மனுதாரர்கள் தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதிவாதிகளான தேர்தல் ஆணைக்குழு குறித்த மனுதொடர்பில் ஆட்சேபனைகள் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள்ளும், மனுதாரர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகும் ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு எதிர்வரும் மே 12ஆம் திகதிவரை வாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்