Last updated on April 11th, 2023 at 07:30 pm

அரிசி ஆலைகள் மூலம் நெல் கொள்வனவு

சிறிய நடுத்தர அரிசி ஆலைகள் மூலம் நெல் கொள்வனவு

 

கிண்ணியா நிருபர்

திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நெல் கொள்வனவு வேலை திட்டத்தினுடைய செயற்பாடுகளை  கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட  மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்பார்வை செய்தார்.

இம்மாவட்டத்தில் 15 சிறிய நடுத்தர அரசி ஆலைகள் மூலமாக 3000 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. தற்போதுவரை 1500 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இவை ஒரு மாதத்திற்கு தலா ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ கிராம் அரிசி என்றவாறு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக மாவட்டத்தில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

தற்போது இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வருமானம் குறைந்த குடும்பங்களோடு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் முதல் கட்டமாக அரசாங்கத்தினால் இந்த பொறிமுறைக்காக 94 மில்லியன் ரூபா நிதி மாவட்டத்திற்கு ஒதுக்கிடப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் 5 சிறிய நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் பிரதேச செயலக ஒருங்கிணைப்புடன் அரசின் நெல் கொள்வனவு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம் விவசாயிகளுடைய நெல்லுக்கு நியாயமான விலை ஒன்று கிடைக்கப்பெறுவதுடன் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரிசி வழங்கக் கூடியதாகவும் அத்துடன் சிறிய நடுத்தர தொழில் அரிசி ஆலை உரிமையாளர்களை வலுப்படுத்துவதற்கும் இந்த வேலை திட்டம் உறுதுணையாக அமையப் பெறுகின்றது.

இந்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி உட்பட ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நேற்றைய தினம் கந்தளாய், சேருவல ஆகிய பிரதேசங்களிலும் இச்செயன்முறை தொடர்பில் அரசாங்க அதிபர் வெளிக்கள விஜயம் மேற்கொண்டு மேற்பார்வை செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்