சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி திறந்து வைப்பு
-கிண்ணியா நிருபர்-
சேவை பெறும் மக்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கான சேவைகளை வழங்குமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பி்தேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்குளம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அரசாங்க அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
இப்பிரதேச செயலகப்பிரிவில் இதற்கு முன்னர் 03 சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிககள் காணப்படுகின்றன. குறித்த வங்கிகளில் சேவை பெறும் பயனாளிகள் அதிகளவில் காணப்படுவதனால் சேவைகளை வழங்கும் போது மக்கள் சி்மங்களை எதிர்நோக்கினார். குறித்த சிரமங்களை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய இப்புதிய வங்கி ஏதுவாக அமையும்.
9 கிராம உத்தியோகத்தர் பிரிவைச்சேர்ந்த சமுர்த்தி பயனாளிகள் இவ்வங்கியின் மூலமான சேவைகளை பெற முடியும். அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளை மக்களை நோக்கி வியாபித்தல் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இது அமையப்பெறுவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
சல்லி, சாம்பல் தீவு, இலுப்பைக்குளம், வரோதய நகர், மாங்காயூத்து, கன்னியா, பீலியடி, வில்கம, வெல்வேரி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் சமுர்த்தி பயனாளிகள் இப்புதிய வங்கி வசதிமூலம் சேவைகளை பெறக்கூடியதாக அமையும் என இதன்போது பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 21 வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 22 வது வங்கி தம்பலகாமத்தில் விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இதன் போது மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சிவகங்கா சுதீஸ்னர் தெரிவித்தார்.
பட்டினமும் சூழலும் உதவி பிரதேச செயலாளர் லக்கி பெரேரா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், சக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.